உள்துறை அமைச்சர் அமி்த் ஷாவுக்கு, கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, அவர் குர்கோவன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் கொரோனாவுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டபோது, ரிசல்ட் நெகடிவ் என வந்தது. அதைத்தொடர்ந்து, அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை தரவே, அமித்ஷா வீட்டுக்குத் திரும்பினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா ட்வி்ட்டரில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் `கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக' (Post Covid Care) என்று கூறி, இன்று அதிகாலை 2 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு தலைவர் மருத்துவர் ஆர்த்தி விஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த சில நாட்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல்வலி மற்றும் உடல்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக வந்துள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்ல உடல்நிலையில் அமித் ஷா இருக்கிறார், மருத்துவமனையில் இருந்தபடியே தன்னுடைய அலுவல் பணிகளை அவர் கவனித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

கடந்த சில மாதங்களாகவே, ``கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு, அதற்கு பின்னரும் ஒருசில அறிகுறிகள் தெரியவரலாம். அவை கொரோனாவாக இல்லாவிட்டாலும், கொரோனா ஏற்பட்டுவிட்டு சென்ற பிறகு ஏற்படும் நீட்சி" என மருத்துவர்கள் பொதுவெளியில் கூறி வந்தனர். அப்படியான் ஒரு பாதிப்புதான் இன்று அமித்ஷாவுக்கும் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. 

இதொவொரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அப்படியான சூழலில்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவரதுஉடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன்அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது. 

அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி ராணுவமருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரணாபின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.