15,000 முதல் நிலை பணியாளர்களுக்குக் கொரோனா உறுதி - வெளியான செய்தியால் அச்சத்தில் அரசாங்கம்!
By Nivetha | Galatta | Jul 18, 2020, 05:17 pm
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் தீவிரமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், மருத்துவர்களும் முதல் நிலை பணியாளர்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளே கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், மற்றவர்களைவிடவும் அவர்களுக்குத்தான் கொரோனாவுக்கான வாய்ப்பு அதிகம்.
அந்தவகையில் மாஸ்க் விநியோகம், பிபிஇ பாதுகாப்பு உடைகள் போன்றவற்றின் விநியோகங்கள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆங்கில பத்திரிகையொன்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், இதுவரை 15,200 முதல் நிலை பணியாளர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 5,000 - க்கும் மேற்பட்டோர் மருத்துவப் பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவப் பணியாளர்களுக்கெல்லாம், பணியிலிருக்கும் நேரத்தில்தான் தொற்று ஏற்பட்டிருந்திருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேற்று (ஜூலை 17) கணக்குப்படி, 5,170 மருத்துவப் பணியாளர்கள், அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த இதழ் கூறியுள்ளது. இத்தனை பேர் பாதிக்கப்படக் காரணம், பி.பி.இ போன்ற பாதுகாப்பு கவசங்கள் போதிய அளவில் இந்தியாவில் இல்லாமல் இருப்பதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை, இந்தியாவில் மட்டுமன்றி, உலகளவில் அனைத்து இடங்களிலும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். கொள்ளை நோய்ப் பரவலின்போது, இப்படியான மருத்துவ உபகரணங்கள் போதை ஏற்படுவது இயல்பு என்பதே நிபுணர்களின் கருத்தும்.
மற்றவர்களைவிடவும் கொள்ளை நோய்ப் பரவல் நேரத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர்தான் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், அவர்களுக்குத்தொற்று உறுதி செய்யப்படுவது இயல்பாக நடக்கும் ஓர் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலோர் குணமாகிவிட்டதாக அரசு சார்பில் கூறப்பட்டுவருகிறது. இந்தியாவில் இதுவரை 99 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1,302 மருத்துவர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அதன் தரவுகள் தெரிவித்திருந்தன.
மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட 99 உயிரிழப்புகளில், 73 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், 19 பேர் 35-50 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 7 பேர் 35 வயதிற்கு குறைவானவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவரான மருத்துவர் ராஜன் சர்மா கூறுகையில், ‘தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் திகழ்கின்றனர். தற்போது மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவ சங்கம் ஆதரவு அளிக்கிறது. நிலைமையைப் புரிந்து கொண்டு மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
என்னதான் மருத்துவர்கள் கவனமாக இருந்தாலும், அரசாங்கம் சார்பில் பிபிஇ பாதுகாப்பு உடைகள், சானிடைசர்கள் வழங்குவதில் முறையான கண்காணிப்பு வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இடங்களில் கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
- ஜெ.நிவேதா