உலகமே கொரோனாவால் முடங்கி கிடக்கின்றது. அடுத்தது என்ன என்பது பற்றியே யோசிக்க முடியாத அளவுக்கு, நாடுகள் அனைத்திலும் பொது முடக்கங்கள், கொஞ்சமான தளர்வுகள் ஆகியவையெல்லாம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

என்னதான் தளர்வுளோடு பொது முடக்கங்களை அனுமதித்தாலும், அவை கொரோனாவை கட்டுப்படுத்த உதவவில்லை என்று பல நாடுகளும் கூறிவிட்டன.

இப்படி உலகமே கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும் நேரத்திலும், உள்நாட்டில் சமூகப் பரவல் மூலம் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது நியூசிலாந்து.

அங்கு, கடைசியாக கடந்த மே 1ஆம் தேதி உள்நாட்டு சமூகப் பரவல் மூலம் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு, கடந்த 100 நாட்களாக ஒருவருக்கு கூட சமூகப் பரவல் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை என அரசு சார்பில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

அதேபோன்று, தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக புதிதாக எந்த வகையான (உள்நாட்டை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்) கொரோனா பாதிப்பும் ஒருவருக்கு கூட உறுதிசெய்யப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலையில், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 23 தான்.

பிப்ரவரி மாத இறுதியில் நியூசிலாந்தில் முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அங்கு இதுவரை 1,219 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கொரோனா வைரஸ் விவகாரத்தில் மற்ற உலக நாடுகளை விட நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதையே நமக்கு காட்டுகிறது.

இதற்காக உலக நாடுகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் பாராட்டுகளை பெற்ற வண்ணம் உள்ள நியூசிலாந்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து முடக்க நிலை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன.

முன்கூட்டியே முடக்க நிலையை அறிவித்தது, வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைய விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், சுகாதாரம் சார்ந்த தகவல்களை மக்களுக்கு திறம்பட கொண்டு சேர்த்தது, தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி உள்ளிட்டவையே நியூசிலாந்தில் கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய பெருமைக்கு காரணமானவை.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மூன்று முக்கியமான விஷயங்களை பின்பற்றியதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, எல்லையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம், தனிமனித இடைவெளி மூலம் சமூக பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனைகள், தொடர்புகளை தடமறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் மூலமாகவும் அந்நாட்டு அரசு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பொது மக்களின் ஒத்துழைப்பும், அரசின் துரிதமான நடவடிக்கைகளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவிகரமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தை தவிர்த்து மற்ற சில உலக நாடுகளும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் தொடக்க நிலையில் சிறப்பாக செயலாற்றினாலும், அதன் பிறகு நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு முடக்க நிலை கட்டுப்பாடுகளை விலக்கியதால் அங்கு மீண்டும் நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 19,524,055 ஆக அதிகரித்துள்ளது. 12,533,783 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.22 லட்சத்தை தாண்டியுள்ளது.