தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதன்படி தனுஷின் கேப்டன் மில்லர். சியான் விக்ரமின் தங்கலான், விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவிருக்கும் வாடிவாசல், கார்த்தியின் ஜப்பான், வசந்த பாலனின் அநீதி, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் நடிகராகவும் பல படங்களில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே ஜிவி பிரகாஷ் தற்போது நடித்து முடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அடியே’ . ஏண்டா தலையில எண்ண வைக்கல, திட்டம் இரண்டு ஆகிய படங்களின் இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகு இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக 96 பட புகழ் கெளரி கிஷன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய முத்தையன் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார், முன்னதாக இவர் இசையில் வெளியான ‘வா செந்தாழினி’ என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அடியே படத்தின் இரண்டாவது பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் பகவதி கிருஷ்ணன் வரிகளில் உருவான ‘முதல் காதல்’ என்ற பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். பள்ளி காதலில் மலரும் முதல் காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த பாடலின் சில காட்சிகளையும் சேர்த்து வெளியாகியுள்ள பாடல் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது அடியே படத்தின் இரண்டாவது பாடல் ‘முதல் காதல்’ ரசிகர்களால் வைரலாகி வருகிறது. முன்னதாக வித்யாசமான முறையில் அரசியல் ஆளுமைகள், திரைபிரபலங்களை நய்யாண்டி செய்து வெளியான அடியே படத்தின் மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.