எஸ்.ஜே சூர்யாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் அவருக்கு தொடர் வெற்றியை கொடுத்து கொண்டே வருகிறது. இறைவி படத்திற்கு பின் வெளிவந்த அனைத்து படங்களிலும் எஸ் ஜே சூர்யா கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக மான்ஸ்டர், மாநாடு, வதந்தி படங்களில் இவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. வில்லனாகவும் , கதாநாயகனாகவும் ஜொலித்து வரும் எஸ் ஜே சூர்யா தற்போது மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய முக்கிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் 'பொம்மை' வித்யாசமான கதைக்களத்தில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ஜோடி இதற்கு முன்பு மான்ஸ்டர் படத்தில் ஜொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிக்க சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஆன்டனி இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் முதல் பாடல் . 'முதல் முத்தம்' வெளியாகியுள்ளது.‌ பாடலாசிரியர் கார்கி வரிகளில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஸ்வேதா மோகன் இப்பாடலை பாடியுள்ளனர். பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்துள்ளார் ராஜூ சுந்தரம். யுவன் குரலில் பாடல் இதமான காதல் பாடலாக உருவாகியிருக்கும் முதல் முத்தம் பாடலை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை தனது சமூக தளத்தில் வெளியிட்டார். அதனையடுத்து தற்போது யுவன் ரசிகர்களால் பாடல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏழு மாதங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியானதையடுத்து தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராதா மோகன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்', 'காற்றின் மொழி' ஆகிய படங்கள் வெற்றி படமாக அமைந்தது. படம் வெகு விமர்சையாக கொண்டாடப்படவில்லை என்றாலும் ஜனரஞ்சகமான அபிப்ராயத்தை மக்களிடம் கொடுத்து விட்டு போகும். நிச்சயம் ராதா மோகனின் பொம்மை திரைப்படம் மக்களிடம் கவனம் பெறும் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.