சமூக ஊடகங்கள் பொழுதுபோக்கு என்றிருந்து பயனாளர்களும் அதன் மூலம் பயனடையலாம் என்ற காலம் வந்து கைப்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தற்போது சமூக ஊடங்கங்கள் மூலம் தங்கள் வாழ்கையின் பாதையை தேர்ந்தெடுத்து தற்போது வளர்ந்து வருகின்றனர். மேலும் அந்த சமூக ஊடகம் மூலம் பிரபலமாகவும் மாறுகின்றனர். அப்படி இளைஞர்களின் மனதை கவரும் அளவு தற்போது சமூக ஊடகங்களில் பிரபல யூடியூபராக வளர்ந்து நிற்பவர் இர்ஃபான். யூடியூபில் லட்சக் கணக்கான ரசிகர்களை கொண்ட இர்ஃபான் விதவிதமான உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் உள்ள உணவுகளின் ருசி மேலும் பல தகவல்கள் கொடுத்து வந்தவர் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து திரை பிரபலங்கள், அரசியல் ஆளுமைகளுடன் நேர்காணல் எடுக்கும் அளவு வளர்ந்து உள்ளார்.

கடந்த மாதம் இர்ஃபானுக்கு கொலாக்கலாமாக திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திரைபிரபலங்கள் உட்பட பலர் வருகை தந்து தம்பதியினரை வாழ்த்தினர். பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணத்தையடுத்து மருவீட்டிற்கு சென்ற பின் சென்னை திரும்பியபோது இர்ஃபான் அவர்களின் கார் மறைமலை நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்களிடம் பரபரப்பாய் பேசப்பட்டது. இந்த விபத்து குறித்து பல வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் கார் விபத்து குறித்து இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். அதில்

“இந்த விபத்து குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த விளக்கம் நான் கொடுக்க முன் வந்துள்ளேன். கடந்த மே 25 ம் தேதி தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு காரில் நான், என்னுடைய மனைவி, மச்சான் மற்றும் குடும்பத்தார் எல்லோரும் ஒரே காரில் வந்து கொண்டிருந்தோம். என் மச்சான் காரை ஒட்டி வந்தார். இரவு ஒன்பது மணி அளவில் திடீரென ஒரு பாட்டி சாலை உள்ளே வந்து விட்டார். என் மச்சான் எப்படியோ திருப்பியும் முடியவில்லை. விபத்து நேரிட்டது. வெளிச்சமில்லாத அந்த நேரத்தில் அங்கு என்ன நேர்ந்தது என்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. அந்த மூதாட்டியின் இறப்பு அவர் குடும்பத்தாருக்கு எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை எங்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. எங்களுக்கே அந்த விபத்து மிகப்பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது. அதனால் அவர் குடும்பத்தாருக்கு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் குடும்பமே இந்த விஷயத்தால் உடைந்து போய்விட்டது. திருமணம் முடிந்து 10நாளில் இப்படி ஒரு சம்பவம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முயன்று வருகிறோம். அந்த சம்பவம் குறித்து நினைக்கும் போதெல்லாம் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

எனக்கு என் காரில் மீண்டும் உட்காரவே பயமாக இருக்கிறது. நாங்கள் சந்தித்த விபத்தின் போதே அதே தினத்தில் அங்கு நான்கு விபத்துகள் நடந்துள்ளது. அதை பற்றி யாரும் பேசவில்லை. ஒரு செய்தி வெளியாகவில்லை. என் சம்பத்தப்பட்ட விஷயத்தை மட்டும் பல்வேறு வகையான தவறான செய்திகளாக வெளியிட்டனர். அது என்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. காவல் நிலையத்தில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

என் காரின் இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இறந்த மூதாட்டி குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். இது மட்டுமல்லாமல் நானும் என்னுடைய தரப்பில் இருந்து அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்வேன்.” என்று விளக்கம் கொடுத்து உருக்காமாக பேசினார்.