உலக அளவில் பிரபலமான தமிழ் ராப் பாடகர்களில் ஒருவராக மக்களின் மனம் கவர்ந்தவர் யோகி.B . மலேசியா தமிழரான யோகி.B தொடர்ந்து அட்டகாசமான பல பாடல்களை பாடி வருகிறார். முன்னதாக இசைஞானி இளையராஜாவின் இசையில், வெளிவந்து ஃபேவரட் பாடலாக திகழ்ந்த மடை திறந்து பாடலை தனது குழுவோட ரீமேக் செய்து யோகி.B வெளியிட்ட மடை திறந்து ரீமேக் பாடல் அந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இன்றைக்கு இருக்கும் அளவிற்கு இலுலாத சமயத்திலேயே ரசிகர்களிடையே வைரல் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ராப் பாடகராக களமிறங்கினார் யோகி.B .

அதில் முதலாவதாக இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமாக நடிகர் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் பாடலின் ரீமேக்கை யோகி.B இசையமைத்தார். தொடர்ந்து இயக்குனர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க, வித்யாசாகர் இசையில் உருவான குருவி படத்தின் ஹேப்பி நியூ இயர் பாடலில் ராப் பாடிய யோகி.B, அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பூம் பூம் ரோபோடா பாடலில் ராப் பாடினார்.

தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இணைந்த யோகி.B, ஆடுகளம் படத்தில் பாடிய போர்க்களம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் அஜித் குமாரின் விவேகம் படத்தில் சர்வைவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் கற்றவை பற்றவை மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் படத்தில் தனி வழி உள்ளிட்ட பல பாடல்களால் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதனிடையே தற்போது நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய யோகி.B பொல்லாதவன் திரைப்படத்தில் பணியாற்றிய சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது,

“பொல்லாதவன் திரைப்படத்தில் எங்கேயும் எப்போதும் பாடல் நானே இசையமைத்தது. SPB சாரை பார்த்ததே.. அந்த மொத்த ரெக்கார்டிங் வேலைகள்… அவரை சந்தித்ததில் இருந்து... இதற்காக இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் உட்காரந்து பேசியபோது, அந்தப் பாடலின் வேகம் எப்படி இருக்க வேண்டும் என அவரோடு உட்கார்ந்து பேசியது… அந்த பாடலுக்காக நான் ஆங்கிலத்தில் எழுத அதற்கு மேல் அதே சந்தங்களில் கவிஞர் யுகபாரதி வரிகளை எழுதினார். அவரோடு பணியாற்றியது மிகவும் அற்புதமானது. அவரோடு பேசி சிரித்து பின்னர் வெற்றிமாறன் சார் அவர்களோடும்… அந்த அனுபவத்தை வாழ்க்கையில் மறக்க மாட்டேன். கவிஞர் யுகபாரதி அற்புதமான ஒரு பாடலாசிரியர். நீங்கள் ஒரு மெட்டு கொடுத்தால் உடனே ஒரு கவிதை கொடுப்பார். அவர் ஒரு கவிதை கடல். இந்தப் பாடலுக்கான இசை பணிகள் எல்லாம் செய்து முடித்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் அவர்களின் ஸ்டுடியோவிற்கு சென்று எல்லாம் தயார் செய்து வைத்து SPB சாருக்காக காத்திருந்தோம். சொல்லப்போனால் அவருக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்தோம். அவருக்கான ஸ்கெடியூல் இல்லை என காத்திருந்தோம். வெற்றிமாறன் சாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றி கூற வேண்டும். ஏனென்றால் அவர்கள் SPB சார் அவர்களிடம் ஒப்புதல் வாங்கி இதற்கான உரிமங்கள் வாங்கி இதை சரியாக எடுப்பதற்கே அவ்வளவு நேரம் பிடித்தது. சிறுவயதில் இருந்து SPB சாரின் பாடல்களைக் கேட்டு வருகிறேன். எனக்கெல்லாம் அவரை பார்க்கும் போது ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் போல தான் இருக்கும். இப்போதும் அவர் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவருடைய குரல் இல்லாமல் இருக்க முடியாது. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் அவருடைய குரல் இன்னும் உயிரோடு இருக்கிறது. எனவே அவரை நினைத்தாலே எனக்கு வார்த்தை சிக்குகிறது. அவரோடு பணியாற்றுவது மிகவும் அற்புதமாக இருக்கும். என்னைக் கூப்பிட்டார், பாட்டின் வரிகளை கொடுத்தேன். அவர் படித்தார். “MSV - SPB - யோகிB நல்லாருக்கே” என சொன்னார் எனக்கு அதையெல்லாம் கேட்கும் போது ஒரு ஆசிர்வாதம் போல் இருந்தது. அவர் என்னை கட்டி அணைத்தபடி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். இப்போதும் அந்த போட்டோ பார்க்கும்போது ஒரு மேஜிக் போல் இருக்கிறது. சாரே ஒரு மேஜிக் தான். அவருடைய குரல் மிகவும் பெரியது சாரோடு பேசும்போதே அவருடைய குரல் இரட்டிப்பாக இருக்கும். பின்பு தான் நான் உணர்ந்தேன் அவருடைய நுரையீரல் பகுதி மிகப் பெரியதாக இருக்கிறது. அவர் பாடுவதற்காகவே பிறந்தவர். அவருடைய உடல் அமைப்பு பாடுவதற்காகவே அமைக்கப்பட்டது. அது அவருக்கு எத்தனையாவது பாட்டு என்பதையும் அவர் குறித்து வைத்துக் கொள்வார். மேலும் அவர் பாடும் போது மிகவும் எளிமையாக பாடுகிறார். புதியதாக பல சங்கதிகளை எல்லாம் உருவாக்குவார். நான் வெற்றிமாறன் சார் மற்றும் யுகபாரதி எல்லாம் மேஜையில் அப்படியே "வாவ்" என பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என யோகி.B தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்ட யோகி.B-யின் அந்த முழு பேட்டி இதோ…