தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய் ஆண்டனி அவர்கள், தொடர்ந்து “நான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அடுத்தடுத்து “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “எமன்”, “காளி”, “திமிரு புடிச்சவன்”, “கொலைகாரன்” என விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

அந்த வகையில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள், இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து வரிசையாக ரிலீஸாக இருக்கின்றன.

இந்த வரிசையில் முன்னதாக சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக பிச்சைக்காரன் 2 அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்து ஆன்டி பிகிலி என்ற வார்த்தையும் படக்குழுவினர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் “பிகிலியின் எதிரி தான் ஆன்டி பிகிலி!” என படக்குழுவினர் தெரிவித்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி அவர்கள் “நான் தான் ஆன்டி பிகிலி” என தெரிவித்தார். அப்படி என்றால் அந்த பிகிலி யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது படக் குழுவினர் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?” “யார் அந்த பிகிலி? என்ற வாசகத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விஜய் ஆண்டனி கண்டுபிடித்த அந்த பிக்கிலி யாரு நாளைக்கு (மார்ச் 16) 6 மணிக்கு அவரே காட்டப் போறாரு பாரு என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவு இதோ…