நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ஹிந்தி ரிலீஸுக்காக சென்சார் போர்டு அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று இருப்பதாக தெரிவித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக கொடி கட்டி பறந்த சில்க் ஸ்மிதாவும் சர்ப்ரைஸாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உருவம் கொண்ட நடிகை விஷ்ணு ப்ரியாவை நடிக்க வைத்து CGI உதவியுடன் பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. அட்டகாசமான இரட்டை வேடங்களில் விஷால் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் வெளியிடுவதற்காக சென்சார் போர்டில் உள்ள அதிகாரிகள் தன்னிடம் 6.5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருப்பதாக மிகுந்த வருத்தத்தோடு நடிகர் விஷால் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில்

"திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்த விவரமான வீடியோ ஒன்றையும் தானே பேசி வெளியிட்டு இருக்கிறார். விஷாலின் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.