தளபதி விஜய் உடன் இணைய இருந்த வாய்ப்பு நடைபெறாமல் போன நிலையில், “ஆன் ஸ்கிரீனில் இணையாத தளபதி விஜய் - புரட்சி தளபதி விஷால் காம்போ எதிர்காலத்தில் அரசியலில் இணையுமா?” என்ற கேள்விக்கு விஷால் பதில் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக விஷால் 34 திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார். ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் இணைந்திருக்கும் இந்த வெற்றி கூட்டணியின் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கும் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். அது குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல் முறை விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க வித்தியாசமான கேங்ஸ்டர் கதை களத்தில் டைம் டிராவல் கொண்ட சயின்ஸ் பிக்சன் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகியிருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தனியார் கல்லூரி ஒன்றில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவ மாணவர்களான ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேள்விகள் கேட்க அதற்கு பட குழுவினரும் பதில் அளித்து வந்தனர். அந்த வகையில் நடிகர் விஷாலிடம் மாணவி ஒருவர், ‘சார் நீங்கள் தளபதி விஜய் உடைய தீவிர ரசிகர் என்பது எங்களுக்கு தெரியும். பேட்டிகளில் எல்லாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது உங்களுடைய தேதிகளால் நீங்கள் போக முடியவில்லை. விஜய் சார் கிட்டத்தட்ட அரசியலுக்கு வந்து விட்டார். நீங்கள் முன்னாடியே அரசியலில் இருந்தீர்கள். தளபதியையும் புரட்சித் தளபதியையும் ஆன் ஸ்கிரீனில் தான் ஒன்றாக பார்க்க முடியவில்லை. அரசியலில் எதிர்காலத்தில் ஒன்றாக பார்க்க முடியுமா?" எனக் கேட்ட போது,

“அதை கடவுள் நிர்ணயிக்க வேண்டிய ஒரு விஷயம். ஏற்கனவே எல்லோரும் இங்கே அரசியல்வாதி தான். நீங்களும் ஒரு அரசியல்வாதி தான். நீங்கள் உங்களை அறியாமலேயே ஒரு 100 ரூபாய் கொடுத்திருப்பீர்கள் யாருக்காவது சாப்பிடுவதற்கு... என்னை பொருத்தவரையில் அரசியல் என்பது சமூக சேவை.. வியாபாரம் அல்ல.. ஒருவர் வயிறு நிறைந்து சாப்பிடுவதற்கு ஒரு 50 ரூபாய் யார் கொடுத்தாலும் அவர் அரசியல்வாதி தான். நாம் கொடுத்தால் நாம் அரசியல்வாதி தான், சமூக சேவை செய்கிறோம். அந்த வகையில் வந்து தெரியவில்லை.. கடவுள் என்ன சொல்கிறாரோ அவரே ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தார் என்றால் பார்க்கலாம்.” என பதில் அளித்துள்ளார் இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட மார்க் ஆண்டனி பட குழுவின் அந்த ஸ்பெஷல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.