நடிகர்கள் விஷால் மற்றும் SJசூர்யா இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Sci Fi ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரிது வர்மா, அபிநயா கதாநாயகிகளாக நடிக்க இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மினி ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைதுள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான அதிருதா பாடல் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாக இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படக்குழு சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் விஷால், “மார்க் ஆண்டனி படத்தில் நான் முதல்முறையா இரட்டை வேடத்தில் நடிக்கின்றேன். கருணாநிதி ஐயா ஆட்சி காலத்தில் பையன் கதாபாத்திரம் மார்க் - 1995 ல வருவான். அப்பா 1975 ல ஆண்டனி எம்.ஜி.ஆர் ஐயா காலக்கட்டம். அதே மாதிரி எஸ்ஜே சூர்யாவும் இரட்டை வேடம். ஜாக்கி பாண்டியன் அபபா. மதன் பாண்டியன் பையன். உங்களுக்கு எல்லாருக்கும் ஒரு விருந்து இருக்கு..” என்றார் நடிகர் விஷால்.

மேலும் தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா குறித்து அவர் பேசுகையில், “இந்த படத்தில் 100 நாளும் நானும் சூர்யா சாரும் சேர்ந்துதான் இருந்தோம்.‌ இன்னிக்கு ஒரு நல்ல நண்பர் என்று சொல்வதை விட எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சிருக்காரு.. நல்லதோ கெட்டதோ அதை பகிர்ந்து கொள்ள ஒரு மனிதர் இருக்கார்.

நான் கொஞ்சம் வருஷம் முன்னாடி சன்டிவில நாம் ஒருவர் னு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தேன். அதுல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள். படிக்க ஆசை இருக்கு ஆனா கையில காசு இல்ல.. அவங்களோட எதிர்காலத்திற்கு பணம் சேகரிக்கும் போது அதை எஸ்ஜே சூர்யா சாரிடம் சொன்னேன். அவர் ரூ.50 ஆயிரம் என் கையால கொடுத்துட்டு வரேன் சார் னு சொல்லிட்டார். இது 2021 ல நடந்தது. இப்போ மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சும்மா பேசிட்டு இருந்தோம். அப்போ நாம் ஒருவர் அடுத்த சீசன் எப்போ னு கேட்டார். வேலை இருக்கறதால அது கொஞ்சம் நேரமாகும் னு சொன்னேன்.சார் இன்னும் அந்த குடும்பத்திற்கு 50 ஆயிரம் கொடுத்துட்டு இருக்கேனு சொன்னார். அது தான் அந்த மனிதர் அதுதான் அவருடைய நல்ல குணம். 25 வருஷமா அவர் ஒரு வெறியோட சுத்திட்டு இருக்கார். அவர் எல்லா நடிகருக்கும் ஒரு ஊக்கம். இவரோட நடிப்பை பார்த்து வியந்து போய் பார்ப்பேன் படப்பிடிப்புல.. இவரிடம் நிறைய கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு" என்றார் நடிகர் விஷால்.