பட்டாசு வாகனம் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உடல் சிதறி பலியான நிலையில், 9 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து சென்னை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று, பழுதடைந்து நின்றுள்ளது.

அப்போது, அருகில் உள்ள கடையில் தண்ணீர் வாங்குவதற்காக ஓட்டுநர் சென்றுள்ளார். அந்நேரம் பார்த்து, பட்டாசு ஏற்றி வந்த சரக்கு வாகனத்திலிருந்து புகை கிளம்பி உள்ளது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில், வண்டியிலிருந்த பட்டாசுகள் எல்லாம் வெடித்துச் சிதறியுள்ளது.

இதில், பட்டாசு ஏற்றி வந்த சரக்கு வாகனம், சுக்கு நூறாகச் சிதறிப்போனது. அத்துடன், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களிலிருந்த கண்ணாடிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த பட்டாசு விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் உறுப்புகள் எல்லாம், ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. இதில், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். மேலும், இந்த விபத்தின் போது, அந்த வழியாகச் சென்ற சிலரைக் காணவில்லை என்றும் அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இந்த வாகனம் புதுச்சேரியிலிருந்து வந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த பட்டாசு விபத்தில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.