எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் வியாழக் கிழமை அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்ககா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமான இந்த லியோ திரைப்படத்தில் எக்கச்சக்கமான சர்ப்ரைஸ்கள் காத்திருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய சர்ப்ரைஸ் LCU. தனது கைதி, விக்ரம் படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் இந்த LCU யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் இடம் பெறுமா? இடம் பெற்றால் அது எப்படி இருக்கும் என ரசிகர்கள் தங்களது ஸ்டைலில் ஒவ்வொரு விதமாக கதைகளை கிளப்பி சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்த அதிரடி காட்சியில் தலை வெட்டப்பட்ட ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசும்போது, தளபதி விஜயின் லியோ திரைப்படமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCUவில் வருவதாக உண்மையை உடைத்தார். கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்த யாரும் இந்த படத்தில் இல்லை எனவே நீங்கள் வந்தால் இது தெரிந்து விடும் வேண்டாம் என படக் குழுவினர் தெரிவித்ததாகவும் சொல்லி தளபதி விஜயின் லியோ LCUவில் தான் வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, “நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லிவிட்டார்கள் இருப்பினும் நான் லியோ படத்தின் படப்பிடிப்புக்கு கும்பலோடு கும்பலாக சென்று விட்டேன். அங்கு போனது நடிப்பதற்கெல்லாம் இல்லை லோகேஷ் கனகராஜ் சாரை பார்ப்பதற்காக தான் போய் இருந்தேன். இரண்டு முறை போயிருந்தேன். அதில் ஒரு முறை அவரை பார்க்க முடியவில்லை." என்றார்.

தொடர்ந்து அவரிடம், “எந்த கேங்கிற்கு சென்றீர்கள் சஞ்சய் தத் நடித்த ஆண்டனி தாஸ் கேங்கிற்கா அல்லது ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஹரால்ட் தாஸ் கேங்கிற்கா எனக் கேட்ட போது, “மொத்தமாக ரவுடி கும்பல் என்று போவார்கள் அப்படித்தான் விக்ரம் படத்தில் போனேன். இதிலும் அப்படி தான் போனேன் ஏனென்றால் எனக்குத் தேவை லோகேஷ் சார். அவரை பார்க்க வேண்டும் அவர் கண்ணில் நான் பட வேண்டும் அவ்வளவு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த மாதிரி தான் போனேன் பார்த்து விட்டேன். அவர் என்னை பார்த்த உடனே வாங்க அண்ணே என்று கூப்பிட்டார். அப்படி என்றால் அந்த அளவிற்கு அவருடைய நினைவில் இருக்கிறேன் அல்லவா நான்… அதுவே பெரிய விஷயம் தான். அவருடைய படத்தில் இருக்கிறேனோ இல்லையோ அவருடைய நினைவில் இருக்கிறேன் அல்லவா.. அதுவே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட இந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.