வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கலையொட்டி ஜனவரி 11ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பெரும்பாலான மொழிகளில் வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் முன்னதாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, குஷ்பூ, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், சங்கீதா என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகிய வாரிசு குடும்பங்கள் குறித்தும் அதில் நிகழும் உணர்வு போராட்டங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது. மேலும் இசையமைப்பாளர் தமன் இசையில் வெளிவந்த 'ரஞ்சிதமே'.. ‘தீ தளபதி’ பாடல்கள் வைரலாகி அதிக பார்வையாளர் அடிப்படையில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பகுதிகளில் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் வினியோகஸ்த உரிமத்தை 'அஹிம்சா என்டர்டெயின்மண்ட் நிறுவனம்' பெற்றுள்ளது. இதனையடுத்து படத்தின் டிக்கெட் விற்பனையிலும் படத்தின் இறுதிகட்ட விளம்பர பணியிலும் தீவிரமாக இறங்கி உள்ளது. முன்னதாக UK டிக்கெட்டுகள் விற்பனையில் சாதனை படைத்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

மேலும் தமிழில் வாரிசு என்ற பெயரிலும் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டுகள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் விற்று தீர்ந்துள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தனர் அஹிம்சா என்டர்டெயின்மண்ட் நிறுவனம்.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் மேலும் ஒரு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது படம் வெளியாகும் வார இறுதி வரை 5 முதல் 6 திரையரங்கு தொடரில் உள்ள ஐக்கிய நாடுகளில் மொத்தம் 1500 காட்சிகள் வாரிசு மற்றும் வாரிசுடு திரைப்படம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதனையடுத்து 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாகி புதிய சாதனையை வாரிசு படைக்கவுள்ளது . என்று அந்நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் வாரிசு சாதனை பட்டியலில் இந்த செய்தியை இணைத்து அந்நிறுவனத்தின் ட்வீட்டை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.