தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11 ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘வாரிசு’. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகளவில் வெளியிடப்பட்ட வாரிசு திரைப்படம் உலகளவில் ரூ250 கோடி வசூல் செய்து சாதனை பெற்று வருகிறது. இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது வாரிசு திரைப்படம். குடும்ப உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகிபாபு, ஷ்யாம் மற்றும் சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது வாரிசு திரைப்படம்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் சரத்குமார், நடிகை ஜெயசுதா ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். இதில் படக்குழுவினருடன் ரசிகர்கள் கேள்வியை எழுப்பினார்கள். அதில் ஒரு ரசிகர் இயக்குனர் வம்சியிடம் ‘துணிவு’ திரைப்படம் பார்த்தாச்சா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வம்சி,

"நான் இன்னும் பார்க்கவில்லை, கண்டிப்பா நான் பார்க்க போறேன். நிறைய நல்ல விஷயங்கள் துணிவு படம் குறித்து கேள்விபடுகிறேன். துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா, இயக்குனர் வினோத் பற்றி நிறைய நல்ல பேசியுள்ளார். எனக்கு துணிவு படம் திரையரங்குக்கு சென்று பார்க்க நேரம் இல்லாமல் இருக்கு. கண்டிப்பாக நானும் துணிவு படம் போய் பார்ப்பேன்.‌ நான் வினோத் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவரை தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா அவர்கள், "நான் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் நடித்தேன். ‌ஒருநாள் படபிடிப்பில் கலந்து கொண்டேன். கொரோனா நோய்த்தொற்று காலம் வந்து ஒரு வருடம் அந்த படம் எடுக்கவில்லை. அதன்பின் அந்த நேரத்தில் நோய் தோற்று நடுவில் நடிப்பது என்பது எனக்கு பயமாக இருந்தது. அதன்பின் அந்த படம் நடிக்க முடியாமல் போனது” என்று குறிப்பிட்டார்.

நடிகை ஜெயசுதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கதாநாயகியாக தாண்டி தற்போது பெரும்பாலான மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தமிழில் ‘தோழா’, ‘செக்க சிவந்த வானம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் வாரிசு படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்த முழு வீடியோ இதோ..