தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒவ்வொரு வருடமும் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அந்த வகையில் இதுவரை ஆறு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகன் ராவ், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனன் மற்றும் ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் ஆகியோர் பிக் பாஸ் டைட்டிலை வென்றனர். இந்த வரிசையில் ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 2022ம் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கினர்.

GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். இவர்கள் தவிர வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவரைத் தவிர இந்த சீசனில் வேறு யாரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவில்லை அதேபோல் எவிக்ட் ஆனவர்களும் ரீ-என்ட்ரி கொடுக்கவில்லை. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் ஃபேவரட்டான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் அறிவிப்பு தற்போது வெளியானது. இதனை அறிவிக்கும் வகையில் உலக நாயகன் கமலஹாசனின் ஸ்டைலான புதிய டீசர் வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் பிக் பாஸ் குறித்த அறிவிப்பு வந்த உடனே இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்ற கணிப்புகளும் பேச்சுகளும் வரும் நாட்களில் சமூக வலைதளங்களில் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அடுத்த மூன்று சீசங்கள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. எனவே இந்த ஏழாவது சீசனும் அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு டீசர் இதோ…