மக்களின் மனம் கவர்ந்த நாயகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு(2022) இறுதியில் வெளிவந்த திரைப்படம் DSP. இதனை அடுத்து இந்த 2023ம் ஆண்டில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் சந்திப் கிருஷ்ணன் நடிப்பில் பேன் இந்தியா படமாக தயாராகியிருக்கும் மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராக இருக்கிறது. அதன் முதல் பாகம் மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து பாலிவுடில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தில் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர், மௌன படமாக தயாராகும் காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தயாராகும் ஜவான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது முதல் வெப் சீரிஸாக இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் FARZI வெப் சீரிஸில் ஹிந்தி நடிகர் சாஹித் கபூர் உடன் இணைந்து விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கே கே மேனன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள FARZI வெப் சீரிஸ் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் நாளை ஜனவரி 13-ஆம் தேதி வெப்சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…