தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லைகர் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக லைகர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜன கண மன திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார்.

முன்னதாக நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி எனும் ரொமான்டிக் காமெடி என்டர்டெயினர் படத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய #VD12 அதிரடி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தை தயாரித்து உள்ள சித்தாரா என்டர்டெயின்மென்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் கௌதம் தின்னாணுறி எழுதி இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தை அறிவிக்கும் வகையில் மிரட்டலான போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…