விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்த சமீபத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தின் வெற்றியின் ஒரு பகுதியாக 100 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாயை பட குழு வழங்கியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த லைகர் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக லைகர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜன கண மன திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இயக்குனர் பூரி ஜெகன்நாத் விஜய் தேவர் கொண்ட கூட்டணியில் வெளிவந்த லைக்கர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் இத்திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் தனது அடுத்த ரொமான்டிக் காமெடி திரைப்படமாக விஜய் தேவர் கொண்டா நடித்த குஷி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன நின்னுக் கோரி, மஜிலி மற்றும் டக் ஜெகதீஷ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவா நிர்வநா எழுதி இயக்கி இருக்கும் குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் ஜெயராம், ரோகினி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, சச்சின் கேட்க்கர், சத்ரு, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முரளி ஜி ஒளிப்பதிவில் பிரவீன் பிடி படத்தொகுப்பு செய்திருக்கும் குஷி படத்திற்கு பேஷம் அப்துல் வஹ்ஹாப் இசை அமைத்துள்ளார். புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குஷி திரைப்படம் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பக்கா பேமிலி என்டர்டெய்னர் ரொமான்டிக் காமெடி படமாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற குஷி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை குவித்தது. இந்த நிலையில் குஷி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வறுமையில் வாடும் நூறு குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயை குஷி படக்குழு பரிசாக வழங்கியுள்ளது. குஷி பட குழுவின் இந்த செயல்பாடு பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த அழகிய நிகழ்வின் புகைப்படங்களை குஷி படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…