இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. தனக்கென தனி பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கா இடம் பிடித்த தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் களமிறங்கி அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் நடித்தார். மேலும், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த 2023ம் ஆண்டில் மட்டும் இதுவரை விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் தமிழரசன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் வரிசையாக வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றன.

கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் ஆண்டணியின் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமான கொலை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அசத்தலான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக நடித்திருக்கும் ரத்தம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் தற்போது விஐய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தனது அடுத்த புதிய திரைப்படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த புதிய படத்திற்கு “ரோமியோ” என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த ரோமியோ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மிருணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த ரொமான்டிக் படத்திற்கு பரத் தனசேகரன் இசையமைக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி அவர்கள் வழங்கும் இந்த ரோமியோ திரைப்படத்தை அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி! உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது. ரோமியோ❤” எனக் குறிப்பிட்டு ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் அட்டகாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…