இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் & படத்தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் நடிகர் விஜய் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு பூரண குணமடைந்து தற்போது மீண்டு வந்துள்ளார். முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் விஜய் ஆண்டனி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட, விஜய் ஆண்டனி பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் விழாவை தொடங்கும் போதே, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள்” எனும் அம்மா பாடலை நமது இசைக்குழு பாட, "உங்கள் வாழ்க்கையில் அம்மா எந்த அளவிற்கு முக்கியமானவர்?" என நாம் எனக்கேட்க,

“நம் எல்லாருடைய வாழ்க்கையிலுமே... கடவுளை நாம் பார்த்ததில்லை. சொல்கிறோம் இருக்கிறார் என்று யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் அம்மாவை கண்டிப்பாக பார்த்திருப்போம். அம்மா உருவில் தான் அவர் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். நம் எல்லோர் வாழ்க்கையிலுமே சிலர் விளையாட்டாக இருப்பார்கள் ஒரு குழந்தை பெற்றதுமே மொத்தமாக வேறு ஒரு ஆளாக மாறிவிடுவார்கள். அவர்களுடைய பசங்களுக்காக என்னமோ உயிரையே கொடுத்து விடும் அளவிற்கு போகிறார்கள். மொத்தமாக தியாகம் செய்கிறார்கள். கணவர் கூட வீட்டை விட்டு வெளியில் சென்று வேலைக்கு போய் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைகள் மற்ற வேலைகள் என வேறு மாதிரி ஒரு வடிவம் எடுத்துக் கொள்கிறார்கள். கண்ணில் பார்க்கிற கடவுள் தான் அம்மா. என் வாழ்க்கையிலும் எல்லா அம்மா மாதிரி தான். கஷ்டப்பட்டு தான் எங்களை வளர்த்தார்கள். அம்மாவைப் பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. நாம் அனைவருக்கும் தெரியும்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம், “உங்களுக்காக உங்கள் அம்மா தனது வாழ்க்கையே அர்ப்பணித்துவிட்டார் என சொல்கிறீர்களா?” எனக் கேட்டபோது, “ஆமாம் என் அம்மாவை பொறுத்தவரை பார்த்தீர்கள் என்றால் 26 வயதிலேயே என் அப்பாவை இழந்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் இன்னொரு கல்யாணம் செய்து இருக்கலாம். இப்போதும் இளமையாக இருக்கிறார்கள், பார்ப்பவர்கள் எல்லாம் என்னுடைய அக்கா என்று தான் சொல்வார்கள். ஆனால் 26 வயதிலிருந்தே என் பசங்களுக்காக என… ஒருவேளை புதிதாக ஒரு கணவன் வந்தால் என் பசங்களை எப்படி காப்பாற்றுவான், எப்படி வளர்ப்பான், என மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். அதனால் எனக்கு அம்மா ரொம்ப ஸ்பெஷல். எல்லோருக்கும் அப்படித்தான்.” என்றார்.

அதையடுத்து, “நீங்கள் வளர்ந்த பிறகு ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று உங்கள் அம்மாவிடம் கேட்டு இருக்கிறீர்களா?” என அவரிடம் கேட்டபோது, “எனக்கே தெரியும் கேட்கிற அளவிற்கு இல்லை... என் அம்மா என்ன காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை… செய்து கொள்ள மாட்டார்கள் என நன்றாகவே தெரியும். அதனால் கேட்டதில்லை ஆனாலும் இதுதான் உண்மை.” என பதிலளித்துள்ளார். விஜய் ஆண்டனியின் அந்த முழு பேட்டி இதோ…