தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 22 ஆவது வயதில் இயக்குனராக முதல் படமான போடா போடி படத்திற்கு கையெழுத்திட்டார். பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகு உருவான போடா போடி திரைப்படம் ஐந்து ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்த வெற்றியை பெறாத போடா போடி திரைப்படத்திற்கு பிறகு சில ஆண்டுகள் வாய்ப்புகள் இன்றி இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பின்னர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி பெற அடுத்தடுத்து தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கிய படங்கள் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இதன் தொடர்ச்சியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அத்திரைப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. எனவே தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் அந்த புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் திரைப்படங்களில் இடம் பெற்ற சில முக்கியமான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு அந்த காட்சியின் பின்னணியில் நடந்த சுவாரசியங்கள் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசினார். அந்த வகையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் நேர்காணல் காட்சி ஒளிபரப்பானது. பின்னர் அந்த காட்சி பற்றி, “அது அவனே ஏதோ உளறினது... அந்த விஷயத்தை நாங்கள் கலந்து பேசி தான் செய்தோம். இந்த அளவிற்கு ஆழமாக என்னால் தனியாக யோசிக்க முடியாது இதை ஆர்.ஜே பாலாஜியும் நானும் சேர்ந்து கலந்து பேசியபோது அவர் தான் அந்த வசனத்தை எடுத்து வந்தார். அந்த இரண்டாவது வாய்ப்பு என்ற இடத்தோடு நின்றது. அதன் பிறகு மீண்டும் கலந்து பேசிய போது இவை எல்லாம் அவர் விரிவுபடுத்தி எடுத்து வந்தது தான்... அவருக்கு அது சார்ந்த அறிவு இருக்கிறது. அது ஒரு கூட்டு முயற்சி தான். இதற்கான பாராட்டு ஆர்.ஜே.பாலாஜி அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்.” என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…