தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற ஃபைட் மாஸ்டராக பல முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் அனைவருக்கும் காட்ஃபாதராக திகழ்ந்தவர் ஜூடோ ரத்தினம் அவர்கள். கடந்த 1966 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் இயக்குனராக ஜூடோ ரத்தினம் அவர்கள் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்திய சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர் அவர்களின் பல அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் ஸ்டன்ட் இயக்குனராக ஜூடோ ரத்தினம் அவர்கள் பணியாற்றியுள்ளார். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இருவரும் ஆளுமைகளின் பல திரைப்படங்களுக்கு ஃபைட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களான விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பொன்னம்பலம் ஆகியோர் ஜூடோ ரத்தினம் அவர்களின் உதவி ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஜூடோ ரத்தினம் அவர்கள்.

கடைசியாக கடந்த 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் திரைப்படத்தில் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தினம் அவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்த தலைநகரம் திரைப்படத்தில் மிக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் திரையுலகிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றார்.

முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாரோடு வசித்து வந்த ஜுடோ ரத்தினம் அவர்கள் தனது 92 ஆவது வயதில் இன்று ஜனவரி 26 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோ ரத்தினம் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களும் பல கோடி ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.