சில நடிகர்களை மட்டும் தான் காலம் கடந்தும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படி நினைவில் இருக்க வேண்டுமென்றால் அழுத்தமான கதாபத்திரங்களை அந்த நடிகர் செய்திருக்க வேண்டும். அதன்படி தமிழ் சினிமாவில் 70 லிருந்து இன்று வரை மிக கவனிக்க தக்க குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சரத் பாபு. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத் குமார், விஜயகாந்த் என்று முன்னணி நடிகர்கள் திரையில் ஒருபுறம் ஆளுமை செய்தாலும் அவர்கள் படங்களில் இவரது கதாபாத்திரம் தனித்து கவனம் பெரும். அண்ணனாகவும் நண்பனாகவும் வில்லனாகவும் மருத்துவராகவும் எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு பொருந்தும் முகமாக சரத்பாபு அவரது நடிப்பு மக்களை கவர்ந்து விடும். குறிப்பாக ரஜினிகாந்த் உடன் நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, மாவீரன், நெற்றிக்கண், வேலைக்காரன் ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிக பிடித்த படமாக இன்றும் இருந்து வருகிறது. அதன்படி மேலும் சரத்பாபு அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடா போன்ற பல மொழிகளில் 200 மேற்பட்ட படங்களில் நடித்து திரைத்துறையில் நிலையான தனி இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் சரத் பாபுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மோசமானதால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் தற்போது அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் அவரை தீவிர கண்காணிப்பில் வைதிருப்பாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவரது உடல்நிலை விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் தற்போது பிராத்தனைகள் செய்து வருகின்றனர்.