"ஆஹா இது லிஸ்டிலேயே இல்லையே!" என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் உலா வந்த செய்தி தான் தளபதி 68. விஜயின 68வது படமான தளபதி 68 திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர்கள் என கடந்த சில மாதங்களாகவே ஒரு சில முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் வலம் வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சில தினங்களுக்கு முன் கசிந்தது இயக்குனர் வெங்கட் பிரபுவின் பெயர். இதனை நிஜமாக்கும்போது நேற்று மே 21 ஆம் தேதி தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2019 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வசூல் சாதனை படைத்த பிகில் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்த்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்கிறது. வழக்கம்போல் வெங்கட் பிரபுவின் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஜய் - யுவன் கூட்டணி இணைந்திருப்பதாக தளபதி விஜயின் ரசிகர்கள் இன்னும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தளபதி 68 படத்தை அறிவிக்கும் வகையில் வெளிவந்த ப்ரோமோ வீடியோவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இதர அறிவிப்புகள் தற்போது தளபதி விஜய் நடித்துவரும் லியோ திரைப்படத்திற்கு பிறகு வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம் ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் அவர்களின் LCUல் இடம்பெருமா எனவும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸாக இருக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களும், விஜயின் மேலாளரான ஜெகதீசன் பழனிசாமி அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜெகதீசன் பழனிசாமி அவர்களின் தி ரூட் தயாரிப்பு நிறுவனம், தளபதி 68 படத்தின் TAGLINE என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். வழக்கமாக வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் கோவா படத்தில் எ வெங்கட் பிரபு ஹாலிடே, மங்காத்தா படத்தில் எ வெங்கட் பிரபு கேம், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் எ வெங்கட் பிரபு சிக்சர். சென்னை 600028-|| படத்தில் எ வெங்கட் பிரபு ரீயூனியன், மாநாடு படத்தில் எ வெங்கட் பிரபு பாலிடிக்ஸ் என்ற TAGLINE உடன் வரும். அந்த வகையில் தளபதி 68 படத்திற்கான TAGLINE என்ன என ஜெகதீசன் பழனிசாமி அவர்களின் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் கேட்க, "HEHEHEHEHE…" என சிரிப்பை மட்டுமே வெங்கட் பிரபு பதிலாக கொடுத்துள்ளார். ஆனால் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் தளபதி 68 ப்ரோமோவை DECODE செய்து எ வெங்கட் பிரபு பஸ்ல் (A VENKAT PRABHU PUZZLE) என இருக்கலாம் என செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா அல்லது உண்மையான TAGLINE என்ன என்பது குறித்து இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து பார்ப்போம்.