தனக்கென தனி பாணியில் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து தொடர்ந்து மக்களை மகிழ்வித்து தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராகவும் திகழும் இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அந்த சமயத்தில் சென்னை 600028 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த காமெடி திரில்லர் படமாக வெளிவந்த சரோஜா திரைப்படமும் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்க, கோவா திரைப்படம் பக்கா காமெடி என்டர்டெய்னராக ரசிக்க வைத்தது.

தனது அடுத்த படத்தில் அஜித் குமாருடன் கைகோர்த்த இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்த மங்காத்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் வேட்டை நடத்தியது. அடுத்தடுத்து கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு பின்னர் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடை இயக்கினார். அடுத்து லைவ் டெலிகாஸ்ட் என்னும் வெப்சீரிஸையும் இயக்கினர். பிறகு முதல் முறை நடிகர் சிலம்பரசன்.TR உடன் கைகோர்த்த வெங்கட பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்டிம் ஆந்த்ராலஜி வெப் சீரீஸில் கன்ஃபசன் எனும் எபிசோடை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

இந்த வரிசையில் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படம் கஸ்டடி. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், கஸ்டடி படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரமான ராசு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மிரட்டலான அந்த கேரக்டர் போஸ்டர் இதோ…