தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விமல் ஆரம்பகட்டத்தில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்து வெளிவந்த களவாணி திரைப்படம் சூப்பர் ஹிட்டாக, அடுத்தடுத்து தூங்காநகரம், எத்தன், வாகைசூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என வரிசையாக குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னிங் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கடைசியாக வெளிவந்த விமலின் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த விலங்கு வெப்சீரிஸ் நடிகர் விமலுக்கு சிறந்த கம்பேக்காக அமைந்துள்ளது.

இதனிடையே இயக்குனரும் நடிகருமான “குட்டிப்புலி” ஷரவண ஷக்தி இயக்கத்தில் குலசாமி படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். MIK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள குலசாமி திரைப்படத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விமலுடன் இணைந்து தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, போஸ் வெங்கட், “குட்டிப்புலி” ஷரவண ஷக்தி, வினோதினி, SR.ஜங்கிட் IPS, கர்ணா ராஜா, மகாநதி சங்கர், முத்துப்பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். WIDE ANGLE ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் ஜீ ஸ்டார் மகாலிங்கம் இசையமைத்துள்ள குலசாமி படத்திற்கு கனல் கண்ணன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் விமலின் குலசாமி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி வரும் விமலின் குலசாமி மோஷன் போஸ்டர் இதோ…