தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்து வருபவர் அருள்நிதி. அதன்படி தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தில் கச்சிதமாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதன்படி சமீபத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’ சாதிய பிரச்சனைக்களுக்கிடையே நட்பின் முக்கியத்துவம் குறித்து பேசும் இப்படத்தினை இயக்குனர் சை கௌதம ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த மே 26ம் தேதி வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் விடுதலை சிருத்தோகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் படக்குழுவினருடன் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் படம் குறித்து பேசிய அவர்,

“கழுவேத்தி மூர்க்கன் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான படம். அனைத்து மொழியிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய படமாகவும் பார்க்கிறேன். சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். அனைவருக்குமான நல்வழியை காட்டியிருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் உள்ளது. யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்தவில்லை. இளம் தலைமுறையினர் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நுட்பமாக இதன் கதை வடிவமைக்கத்துள்ளார். சாதி வரம்புகளை கடந்து நட்பு உருவாக வேண்டும், அது வலுவாக இருக்க வேண்டும். அருள்நிதியின் நடிப்பு அபாரமாக உள்ளது. நடிப்பில் முதிர்ச்சி வெளிப்படுகிறது. அருள்நிதி , சந்தோஷ் நடிப்பு சிறப்பு இரண்டு பெரும் இரண்டு கதாநாயகர்களாக மிளிர்கிறார்கள். இந்தப் படத்தில் நண்பர்களாக வரும் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வழிகாட்டுவதாக ஜனநாயகத்தை கற்பிப்பதாக இருக்கிறது. சாதிகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல்கள் வெடிப்பதுக்கு அதிகார வர்க்கத்தின் அணுகுமுறையும் காரணமாக இருக்கிறது என்பதையும், என தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் ஓர் உரையாடலை வைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டு சமூகத்தை சேர்ந்த மூர்க்கன், பூமிநாதன் இடையே நட்பு மேலோங்குகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியமாக வேண்டும் என்ற இயக்குநரின் வேட்கை, கனவு வெளிப்படுகிறது. சாதி என்ற உடன் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. சாதி என்றவுடன் காதலை தூக்கி எறிந்து விட கூடாது. திரைப்படத்தில் இரண்டு காதல்கள் வருகிறது. காதலிலும் சாதியை கடந்து மொழியைக் கடந்து இந்த உறவு வர வேண்டும் என்பதை இயக்குனர் சிறப்பாக சித்தரிக்கிறது. சாதி அடிப்படியிலான பகவை கூடாது. கல்வி கற்க வேண்டும் போன்ற வசனங்கள் வருகிறது. புத்தக வாசிப்பை வலியுறுத்துகிறது.

மூர்க்கன் தலித் அல்லாத சமூகத்தில் எழும் நாயகனாகவும் பூமிநாதன் தலித் சமூகத்தில் மிளிர்கிற நாயகனாகவும் இரண்டு கதாபாத்திரங்களுடன் அதிகார வர்க்கத்தை தோலுரித்திருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாக்கே உயர்வானது என்பதை இயக்குநர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகச்சிறந்த போதனையை சாதியவாதிகளுக்கு, மதவாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, அதிகார வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டக் கூடிய ஒரு திரைப்படமாக இருக்கிறது. கௌதம ராஜ் அவர்களை நான் பாராட்டுகிறேன். கௌதம ராஜ் போன்ற இயக்குனர்கள் தமிழ் சமூகத்திற்கு தேவை என்று பார்க்கிறேன்.” என்று படம் குறித்தும் படக்குழுவினர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கழுவேத்தி மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைக் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன். 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.” குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தொல் திருமாவளவன் அவர்களின் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.