ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் அறிக்கை தாக்கல் செய்யத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்த மாமல்லபுரம் சூளேரி கடற்கரைக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து 32 வயதான ஒரு பெண் சுற்றுலா வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர், அங்குள்ள கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர், ஜெர்மனி பெண்ணை கடத்திச் சென்று, கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த அங்க அடையாளங்களைக்கொண்டு, குற்றவாளியின் மாதிரி படங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.