உலக சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். தனித்துவமான திரைக்கதையும் அறிவு ஜீவிகளுக்கே சோதனை கொடுக்கும்படியான தியரிகளை கொண்டு நுணுக்கமாக படங்களை இயக்கி உலக திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கும் இவரது திரைபடங்களுக்கும் இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒப்பன்ஹைமர். அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஒப்பன்ஹைமர் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இப்படம் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.

அதன்படி கடந்த ஜூலை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஒப்பன்ஹைமர் படத்தினை நோலன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவிலும் இப்படத்திற்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலனின் ஒப்பன்ஹைமர் திரைப்படம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்ற பகவத் கீதையின் வரிகளை படிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த நிகழ்வு இணையத்தில் பேசு பொருளாக மாறியள்ளது. மேலும் இது குறித்து கண்டனங்களும் எழுந்து வருகிறது.

அந்த காட்சி குறித்து பல இந்து மத அமைப்பினர் படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் இது போன்ற காட்சிகளை தணிக்கை குழுவினர் ஏன் நீக்கவில்லை என்றும் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சையை எற்படுத்தும் காட்சி என்று உணராள் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கும்படியும் ஒப்புதல் அளித்த தணிக்கை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.

மேலும் Save culture save India அறக்கட்டளையின் சார்பாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.தற்போது ஒப்பன்ஹைமருக்கு எதிராக வரும் அறிக்கைகள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இருந்தும் கிறிஸ்டோபர் நோலனின் ஒப்பன்ஹைமர் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் 174 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.50 வசூல் செய்து இன்றும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.