தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அட்டகாசமான படங்களுக்கு தனித்துவமான இசையமைத்து இன்று வரை முன்னணியில் வலம் வரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. 2000 ஆண்டுகள் தொடங்கி இன்று வரை தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல் ஹாசன், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் தெலுங்கிலும் முன்னணியில் வளர்ந்து வந்தார். சமீபத்தில் இவர் இசையில் பான் இந்திய திரைப்படமாக அமைந்த ‘புஷ்பா’ இந்திய அளவு பாடல்கள் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் புஷ்பா தி ரூல் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா ஆகிய பான் இந்திய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கும் வகையில் இசை நிகழ்சிகளும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறார். இவரது இசை நிகழ்ச்சிக்கே தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதன்படி அவரது அடுத்த இசை நிகழ்ச்சி வரும் மே 27 ம் தேதி மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் பிளேஸ், ரீட்டா, ரஞ்சித், மாலதி, சாகர், ஹரி பிரியா, ராகுல் நம்பியார், ரணினா மற்றும் பலருடன் தேவி ஸ்ரீ பிராசாத் இந்ந நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி டிடி திவ்ய தர்ஷினி தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் தென்னிந்தியாவின் ராக்ஸ் ஸ்டாராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்தும் அவரது அடுத்த இசை நிகழ்ச்சி குறித்தும் உலகநாயகன் கமல் ஹாசன் சிறப்பு வீடியோவில் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், “நண்பரும் சகோதரருமான தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் ஊ சொல்றியா டூர்.. எனக்கு இவரிடம் பிடித்தது ஒரு இசையமைப்பாளர் என்ற வரம்புகளை தாண்டி அவர் ஒரு நல்ல பொழுதுபோக்காளர். காதுக்கு கண்ணுக்கு இதயத்திற்கு இதமாக இருக்க கூடிய ஒரு நிகழ்ச்சி இதயம் படபடவைக்க கூடிய தாளங்கள் இவருடைய நிகழ்ச்சியில் இருக்கும். எனக்கு அது பிடிக்கும்.. அவரை ராக்ஸ்டார் என்று சொல்வார்கள் அது மிகையல்ல.. ஹாலிவுட் ல மட்டும் அப்படி இல்லை. நம்ம ஊருலயும் அப்படி ஒருத்தர் இருக்கார்.” என்று புகழ்ந்து பேசியுள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல் ஹாசன் கூட்டணியில் தேவி ஸ்ரீ பிரசாத் ;மன்மதன் அம்பு’ படம் வெளியானது இப்படத்தின் பாடல்கள் அப்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலிருந்தே தேவி ஸ்ரீ பிரசாத் – கமல் ஹாசன் நட்புறவு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தையும் படக்குழுவினருடன் கமல் ஹாசன் , தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.