இந்திய சினிமாவில் அனைத்திலும் முன்மாதிரியாக இருந்து தமிழ் சினிமாவில் பெருமைமிகு கலைஞராக இருப்பவர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள். பல தசாப்தங்களாக தன் நடிப்பினாலும் சினிமா மீது கொண்டுள்ள அதீத காதலினாலும் கமல் ஹாசன் பெருமளவு ரசிகர்களின் பிடித்த நட்சத்திரமாக இன்னும் இருந்து வருகிறார். மூத்த கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் இந்திய சினிமாவே வியக்கும் அளவு பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து வருகிறார். முன்னிலை நடிகரான கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் கமல் ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் அந்த வரிசையில் எச் வினோத், வெற்றிமாறன், பா ரஞ்சித் இருப்பதாக தகவல். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

1996 ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவே வியக்க வைக்குமளவு வெளியான தமிழ் திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஊழல் எதிர்ப்பு கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்கள் வரிசையில் இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுக்கு பின்னர் இந்தியன் படத்தின் தொடர்ச்சியான அடுத்த பாகம் இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. லைகா நிறுவனம் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உலகநாயகன் கமல் ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுல் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மும்முரமாக நடைபெற்ற இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்வான் பகுதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து இந்தியன் 2 படக்குழு தாய்வான் நாட்டிற்கு பறந்துள்ளனர். இதனையடுத்து கமல் ஹாசன் அவர்களும் தாய்வான் நாட்டிற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்வான் நாட்டிற்கு செல்ல காத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “இந்தியன் 2 படத்திற்காக தாய்வான் நாட்டிற்கு செல்லவிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கமல் ஹாசன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்தியன் 2 திரைப்படம் ஆந்திரா, திருப்பதி ஆகிய இடங்களிலும் அடர்ந்த காட்டு பகுதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.