தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என லியோ திரைப்படத்தை வெளியிடும் வெளிநாட்டு விநியோக நிறுவனம் அட்டகாசமான விமர்சனத்தை தற்போது வழங்கி இருக்கிறது. இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய் நடிப்பில் அடுத்த சில தினங்களில் வெளிவர இருக்கிறது லியோ திரைப்படம். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படமாக லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் திரைபயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் தனது வழக்கமான ஆக்ஷனை தாண்டி CG உதவியுடன் கழுதைப்புலி உடனான ஒரு மிரள வைக்கும் சண்டைக் காட்சியை விஷுவல் ட்ரீட்டாக லோகேஷ் கனகராஜ் வழங்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். நாளுக்கு நாள் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இளியோ திரைப்படத்தின் டிரைலர் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இன்னும் அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக UKவில் ரிலீசுக்கு ஆறு வாரங்கள் முன்பே லியோ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவில் 50,000 மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக UKவில் லியோ திரைப்படத்தை வெளியிடும் அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் சென்சாரம் நிறைவடைந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் லியோ திரைப்படத்தை பார்த்த அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் லியோ திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

அந்த விமர்சனத்தில், “லியோ திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படம் மிகவும் ராவான மற்றும் வன்முறை கொண்ட படமாக இருக்கிறது.இது கட்டாயமாக 15 வயதிற்கு மேற்பட்டோருக்கான படம் எனவே படத்தின் இந்த உண்மையான தன்மை குறையாமல் இருப்பதற்காக 12A (12 வயதிற்கு மேற்பட்டோர்) வர்ஷனுக்கு போகாமல் இப்படியே வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கின்றனர். அஹிம்ஷா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் இந்த பதிவால் பக்கா ஆக்சன் ட்ரீட் உறுதி என தளபதி விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்து இருக்கின்றனர். லியோ திரைப்படம் குறித்து அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் பதிவிட்ட விமர்சனம் இதோ...