ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். பரியேறும் பெருமாள் & கர்ணன் திரைப்படஙகளின் மூலம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் மாமன்னன் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜூன் மாதத்திலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாமன்னன் திரைப் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் அட்டகாசமான இசை கச்சேரியோடு நடைபெற்ற இந்த இசை வெளியீட்டில் மாமன்னன் படத்தின் 7 பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் திரை உலகைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் போனி கபூர், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் H.வினோத், இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்னேஷ் சிவன், சூரி, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், விஜய் ஆண்டனி, கவின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாமன்னன் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்ததிலிருந்து பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான பிறகு இன்னும் ஆர்வத்தை தூண்டியது. இதனை அடுத்து மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்த சில தினங்களில் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில், விழா தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இந்த ஜூன் மாதத்தின் இறுதிக்குள் மாமன்னன் திரைப்படம் வெளியாவது உறுதி ஆகிவிட்டது ஆனால் ரிலீஸ் தேதி மட்டும் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் இன்னும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.