ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து பலவிதமான எதிர்பார்ப்புகள் கிளம்பிய ஒரு சில திரைப்படங்களில் மிக முக்கிய திரைப்படமாக விளங்குகிறது மாமன்னன். அதற்கு மிக முக்கியமான முதல் காரணம் வைகைப்புயல் வடிவேலு. வியாபார நோக்கத்திற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ கதையில் எந்த சிறு விஷயத்தையும் சேர்க்காமல் முழுக்க முழுக்க அந்த கதை களத்திற்காக நேர்மையாக கதாபாத்திரங்களையும் திரைக்கதையும் அமைத்து பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என அசாத்தியமான இரண்டு படைப்புகளை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வடிவேலு நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த சமயத்திலேயே ரசிகர்களின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.

தற்போது வெளிவந்திருக்கும் மாமன்னன் ட்ரெய்லர் அந்த ஆச்சரியத்தை கொஞ்சமும் குறைக்காமல் அதேசமயம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக கூட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கும் முதல் காரணம் வடிவேலு தான். இதுவரை பார்த்திராத புதிய வெர்ஷனாக நடித்திருக்கும் வைகை புயலை “வடிவேலு 2.0” என குறிப்பிட்டு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ட்ரெய்லரின் தொடக்கத்தில் வரும் வைகைப்புயலின் வாய்ஸ் ஓவரும், இறுதியில் கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் வைகைப்புயல் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியில் அவரது அனல் பறக்கும் கண்களும் இந்த அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சாட்சி. வடிவேலு மட்டும் அல்ல உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இதுவரை பார்த்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கும் இந்த மாமன்னன் திரைப்படம் அவரின் திரை பயணத்தில் அவர் தொட்ட உச்சம் என்றும் சொல்லலாம்.

நடிப்பின் அரக்கனாக படத்திற்கு படம் வெரைட்டி கொடுத்து வரும் ஃபகத் பாசில் நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பாச்சும் அத்புத விளக்கும் திரைப்படத்தில் மிகவும் சாதுவாக சண்டை போடக்கூடிய இடத்தில் கூட பெப்பர் ஸ்பிரே அடித்து ஓடும் துருதுரு கதாபாத்திரத்தில் நடித்த ஃபகத் பாசில், மாமன்னன் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக மிருகத்தனமாக நடித்திருக்கிறார் என்பது ட்ரெய்லரின் ஒரு சில ஃப்ரேம்களிலேயே தெரிந்துவிட்டது. கதாநாயகி என்ற பெயரில் நாயகனோடு டூயட் பாடுவதற்காகவும் சொற்பமான காட்சிகளில் வந்து செல்வதற்காகவும் அல்லாமல் துணிச்சல் மிக்க புரட்சிப் பெண் என சொல்லும் அளவிற்கு தரமான கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக முன்வந்து நிற்கிறார் கீர்த்தி சுரேஷ். தனக்கே உரித்தான ட்ரேட் மார்க் விஷயங்களோடு அழுத்தமான அரசியல் படமாக தான் எதிர்பார்த்த அத்தனையையும் இயக்குனர் மாரி செல்வராஜ் கொட்டியிருப்பார் என்றும் ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்து பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் உச்சமாக ட்ரெய்லரின் ஆரம்பத்தில் இருந்த நிசப்தத்தில் இருந்து இறுதி ஃப்ரேம் வரை தனது இசையால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தேனி ஈஸ்வரின் அட்டகாசமான ஒளிப்பதிவும் RK.செல்வாவின் படத்தொகுப்பும் கணகச்சிதமாக இருக்கின்றன. வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்ரெய்லர் இதோ…