கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் தென்னிந்திய திரை உலகின் நட்சத்திர நாயகியாகவும் ஜொலிக்கும் நடிகை திரிஷா இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் நடிகை திரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவையாக ரசிகர்களை வசீகரித்த நடிகை திரிஷா தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களின் வரிசையில் ஐந்தாவது படமாக விஜய் - திரிஷா கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னதாக சலீம் படத்தின் இயக்குனர் NV.நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி உடன் இணைந்து திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அதேபோல் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான NH10 படத்தின் ரீமேக்காக திரிஷா நடித்த அதிரடி திரைப்படமான கர்ஜனை படமும் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. முன்னதாக முதல் முறை காவல்துறை அதிகாரியாக தெலுங்கில் த்ரிஷா நடித்த பிருந்தா வெப் சீரிஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீஸாக தயாராகி வருகிறது. அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். திரிஷ்யம் திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் திரிஷா நடிப்பில் அடுத்த ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் தி ரோட். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தி ரோட் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஷபீர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, நேகா ஷஹின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AAA சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி ரோட் திரைப்படத்தில் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று மே 4ம் தேதி நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசாக தி ரோட் திரைப்படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோ இதோ…