டீச்சரிடம் அத்துமீறி நடந்த சிறுவனை என்ன செய்யலாம் என்று போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள மருதமலைக் கிராமத்தில், மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக, அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளி முடிந்துவிட்டு மாலையில் வீட்டிற்குச் செல்வதற்காக, மேதையிலிருந்து காட்டுப்பகுதி வழியாக செம்புலிச்சான்பட்டி கிராமத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்குப் போதையில் வந்த 15 வயது சிறுவன், டீச்சரிடம் சில்மிஷம் செய்து, தவறாக நடக்க அத்துமீறி உள்ளான்.

இதனால் பயந்துபோன டீச்சர், சிறுவனைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, சத்தம் போட்டுக்கொண்டே அலறி அடித்துக்கொண்டு, மீண்டும் மருதமலை கிராமத்துக்கே ஓடி வந்துள்ளார். அங்கு வந்து ஊர் பொதுமக்களிடம் நடந்ததைப் பதற்றத்தோடு கூறியுள்ளார்.

இதனையடுத்து, கிராம மக்கள் சிலர் ஒன்றுதிரண்டு, டீச்சருக்கு ஆதரவாகத் திருச்சி துறையூர் காவல் நிலையத்திலும், ஆதிதிராவிட பழங்குடியினர் திட்ட அலுவலர் ரெங்கராஜ் ஆகியோரிடமும் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது, டீச்சர் திருமணம் ஆகாதவர் என்பதாலும், சிறுவனுக்கு 15 வயது மட்டும் ஆவதாலும், இருவரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆனால், அதன் பிறகு போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, அந்த 15 வயது சிறுவன் போதையில் அடிக்கடி அப்பகுதியில் உள்ள சிமிகளிடம் இதுபோன்று அத்துமீறி நடந்துகொள்வதாக, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டீச்சரிடம் சிறுவன் அத்துமீறி நடந்த சம்பவம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுக்க பறவி உள்ளது.

இதனால், புகாரில் சம்மந்தப்பட்ட சிறுவன் மீது என்ன வழக்குப் போடுவது என்பது குறித்து, போலீசார் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, டீச்சரிடம் சிறுவன் அத்துமீறி நடந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.