லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களாக 3 வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சத்திரம் பேந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில், ஆள் நுழையும் அளவுக்குத் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான 700 விதமான நகைகளையே மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடையில் மொத்தம் 200 கிலோ தங்க நகைகள் இருந்துள்ள நிலையில், வெறும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளை மட்டுமே கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விலங்குகள் முகம் கொண்ட முகமூடி அணிந்த தரையோடு தரையாகக் கொள்ளையர்கள் ஊர்ந்து நுழைவதும், வட மாநிலத்தவர்கள் உட்காருவது போல், குத்த வைத்து உட்கார்ந்து ஷோ கேசில் உள்ள நகைகளை மட்டும் கொள்ளையடித்ததை போலீசார் அறிந்தனர்.

இது தொடர்பாக 7 தனிப்படைகள் வரை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணிகண்டனை துரத்திப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடன் வந்து தப்பிய ஓடியவர் சுரேஷ் என்பதும், லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் மொத்தம் 8 பேர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, மேலும் இரு தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த 8 பேர் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தன.

குறிப்பாகத் தப்பிய ஓடிய சுரேஷ், பிரபல வங்கிக் கொள்ளையன் முருகனின் உறவினர் என்பது தெரியவந்ததால், முருகன் பக்கம் வழக்கின் போக்கு திரும்பியது. இதனால், முருகன் தலைமையிலான கும்பலே, இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்பட்டனர். சந்தேகப்பட்டைதைப் போலவே, முருகனும் அவனது முக்கிய கூட்டாளிகளும் தலைமறைவானார்கள்.

இதனிடையே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தப்பியோடிய மணிகண்டனை, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு, துரத்திச்சென்று பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த திருப்பமாகமணிகண்டனுடன் டூவிலரில் வந்து வாகன சோதனையின் போது தப்பிய ஓடிய சுரேஷின் தாயார் கனகவல்லி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கைதான மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவல்லி ஆகியோரை திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மணிகண்டன் திருச்சி மத்தியச் சிறையிலும், கனகவள்ளி காந்திமார்க்கெட் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தற்போது, இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான, முருகனின் அண்ணன் மகன் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. அத்துடன், இந்த நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் 14 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.