திருச்சி அருகே நள்ளிரவில் நடந்த அகோரிகள் பூஜை திகிலைக் கிளப்பி உள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள அகோரி காளி கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அகோரிகள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கங்கா, பிரம்மபுத்திரா, நர்மதா, கிருஷ்ணா, காவிரி, யமுனா, சரஸ்வதி, மகா நதி, கோதாவரி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படும்.

இந்நிலையில், நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காளிக்கும், ஜெய் அஷ்டகால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய தெய்வங்கள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த பூஜையில், அகோரிகள் பலர் கோவணம் கட்டி, தங்களது உடம்பில் சாம்பல் பூசிக் கொண்டு, யாக பூஜையில் ஈடுபட்டனர். பூஜையின் நடுவே சங்குகள் முழங்கியும், டமருகம் மேளம் அடித்தும், மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்த சாம பூஜையானது பார்ப்பவர்களுக்கு, திகிலைக் கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.