கடந்த மே 5 ம் தேதி இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘2018’. காவ்யா பிலிம் கம்பெனி, பிகே பிரைம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான கடந்த 2018 ல் கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பெருவெள்ளத்தை கதையின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், குஞ்சாகா போபன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவில் உருவான இப்படத்திற்கு நோபின் பால் இசையமைத்திருப்பார்.

முதல் பார்வை தொடங்கி முன்னோட்டம் வரை இப்படத்திற்கு தனி எதிர்பார்பு ரசிகர்களிடம் உருவாக்கியது. அதன்படி வெளியான இப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஆதரவினை அளித்து திரைப்படத்தை வெற்றி பெற செய்தனர். நிதனாமா தொடங்கிய படத்தின் வரவேற்பு ஆரவாரமாக அதிகரித்து கேரளா மட்டுமின்றி இந்தியாவில் பல மாநிலங்களில் இப்படத்திற்கு தனி வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. அதன்படி தற்போது திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் முடிவடைந்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ 100 கோடி வசூலை எட்டி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

முன்னதாக மலையாளத்தில் நடிகரும் இயக்குனருமான பிரித்வி ராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. அந்த சாதனையை 11 நாட்களில் எட்டி அதிவேகமாக ரூ 100 கோடியை எட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையை 2018 திரைப்படம் அடைந்துள்ளது. இதனை மலையாள திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடும் நிலையில் படக்குழு அட்டகாசமான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி 2018 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வரும் மே 18 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த அறிவிப்பினை உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். மற்ற மொழிகளில் வெளியாகும் தேதியை டிரைலருடன் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் இதுபோல வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் கன்னடத்தில் வெளியான காந்தாரா. அந்த படத்தினை போல் இந்த படமும் இந்திய அளவு வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.