முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.

வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாய் நாடு திரும்பினார். சென்னை திரும்பிய முதலமைச்சர் பழனிச்சாமிக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். 40க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்யப் பலரும் ஆர்வம் காட்டியதாகவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டம் உள்ளதாகவும், கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, அடுத்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக நீர் மேலாண்மைக்காக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.