ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை பூர்த்தி செய்யாத நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் மிக மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக ஜெயிலர் திரைப்படம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்திருக்கிறது. வெளியான எல்லா மொழிகளிலும் எல்லா இடங்களிலும் நல்ல விமர்சனங்களோடு ஹவுஸ்புல் காட்சிகளாக தொடர்ந்து நல்ல வசூல் செய்து வரும் ஜெயிலர் திரைப்படம் இந்திய சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இந்த வசூல் வேட்டை கேஜிஎப் திரைப்படத்தின் வசூலை முறியடிக்குமா என்றும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி விநியோகஸ்தர்களில் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் நமக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியில் ஜெயிலர் திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் வசூல் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அப்படி பேசுகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் திரைப்படம் எட்டுமா? என கேட்டபோது, “வரட்டுமே வசூல் செய்தால் நல்ல விஷயம் தானே நமக்கு ஒரு தமிழ் படம் அந்த அளவுக்கு வசூல் செய்யும் போது பொறுமையாக எடுத்துக் கொள்ள வேண்டியது தானே " என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் , சிவராஜ்குமார் , ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இணைந்து நடித்திருப்பதால் அந்தந்த மாநிலங்களில், நல்ல வியாபாரம் நடப்பதாகவும் ஒரு பேச்சு வருகிறது எனக் கேட்டபோது, “இனிமேல் அப்படித்தான் இதுவரை வந்த தெலுங்கில் வந்த படங்களுமே அப்படிதான் புஷ்பா 2 ,மாஸ்டர் , விக்ரம் 2 , RRR எல்லாமே மல்டி ஸ்டாரர் படம் தான் இனி மல்டி ஸ்டாரர் படங்கள் தான் வியாபாரம் செய்யும். இன்னும் சொல்லப் போனால் மல்டி ஸ்டார் மல்டி லாங்குவேஜ் அப்படித் தான் இப்போது சினிமா போய்க்கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட திருப்பூர் மணியம் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.