ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக வலம் வந்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் காக்கி, தமிழரசன், அக்னிசிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை ஆகிய திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே அடுத்ததாக பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது ரத்தம் திரைப்படம். தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தம் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் என்.கண்ணன் இசையமைக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வாத்தி ரைடு, மாநாடு படத்தில் வாய்ஸ் ஆஃப் யுனிட்டி என பல தரமான பாடல்களை எழுதி பாடும் தெருக்குரல் அறிவு ரத்தம் திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதனை இயக்குனர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெருக்குரல் அறிவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் இந்தப் பாடல் மற்றும் ரத்தம் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Had the pleasure of recording a song with the freakishly talented @TherukuralArivu . He brings an explosive combination of intellectual depth, lived experience & virtuosu artistry to every song. We are lucky to have him. #Ratham @vijayantony @FvInfiniti pic.twitter.com/PEzNMnouXd

— CS Amudhan (@csamudhan) January 28, 2022