குடும்பத்தகராறு காரணமாக மனைவியைக் கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டியைச் சேர்ந்த 42 வயதான முத்துகண்ணன், ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவருடைய மனைவி அங்காள ஈஸ்வரிக்கும், திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

திருமணம் ஆனது முதல், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 14 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி அங்காள ஈஸ்வரி, தனது தந்தை கணேசன் வீட்டில் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முத்து கண்ணனுக்கும், அங்காள ஈஸ்வரியின் தம்பியான சங்கிலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில், முத்துகண்ணன் அரிவாளால் தாக்கியதில், சங்கிலி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த பிரச்சனையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முத்துக்கண்ணன் கைது செய்தனர்.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து வீடு திரும்பிய முத்துகண்ணன், அங்காள ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி அங்காள ஈஸ்வரியும், சின்ன பையனும் இருந்துள்ளனர். அப்போது, “உன்னால் தான், என் பசங்க என்கிட்ட பேச மாட்றாங்க” என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து, அங்காள ஈஸ்வரியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது சின்ன மகன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முத்துகண்ணனை தாக்க முற்பட்டுள்ளனர். அதற்குள் அவர் தப்பித்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து, படுகாயம் அடைந்த அங்காள ஈஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய முத்துகண்ணனை தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடும்பத்தகராறு காரணமாக மனைவியைக் கணவன் குத்தி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.