விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்களின் பேராதரோவோடு வெளியாகி உலகெங்கிலும் வசூல் ரீதியாக சாதனை பெற்று வருகிறது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் உலகளவில் பல இடங்களில் கோலாகலமாக கொண்டாட்டங்களுடன் வாரிசு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெய சுதா, ஷ்யாம், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், சதீஷ், விடிவி கணேஷ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் வாரிசு திரைப்படம் ஒரே வாரத்தில் உலகளவில் 210 கோடி வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. கூடிய விரைவில் 250 கோடி ரூபாயை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான மிகப்பெரிய படமாக வாரிசு திரைப்படம் தன்னை பதிவு செய்துள்ளது. விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் விஜயின் வாரிசு வெற்றிநடைபோட்டு கொண்டிருகிறது.

தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியான வாரிசு திரைப்படம் தெலுங்கு மக்களிடம் வரவேற்பை பெற்று வருவதாக தகவல் வெளியானது. மேலும் முதல் நாளை விட தற்போது வாரசுடு படத்திற்கு காட்சிகள் அதிகரித்துள்ளது என்ற நிலை உருவாகியுள்ளது. விஜய் திரைப்படங்களை தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்களில் வாரசுடு திரைப்படம் பெரியளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது படக்குழு தெலுங்கு ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை வாரசுடு படம் சார்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தெலுங்கு ரசிகர்களையும் பத்திரிக்கையாளர்களையும் சந்திக்கவுள்ளனர். மதியம் 1 மணியளவில் ராஜாமுந்திரியில் முதலில் பத்திரிக்கையாளரை சந்திக்கவுள்ள படக்குழு பின் 2.30 மணியளவில் காக்கி நாடா பகுதியில் அமைந்துள்ள தேவி திரையரங்கில் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அதன் பின் இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள மெலடி திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து பின் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.