உலக அளவில் திரையுலகில் வரும் திரைப்படங்களை ரசிகர்களின் விமர்சனங்கள், மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு வரிசை படுத்தி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிடுகளை வழங்கி வரும் பிரபல நிருவனம் ஐஎம்டிபி (IMdb) இந்த ஆண்டும் முதல் ஆறு மாதங்களில் உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பட்டியலை வரிசைப் படுத்தி வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் உலகளவில் கவனம் ஈர்த்த இந்திய தொடர் பட்டியலில் முதல் இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்ற ஃபார்ஸி’ இணைய தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதை தொடர்ந்து இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை டாப் 10 திரைப்படங்களில் ஷாருக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் பதான் முதலிடம் பிடித்துள்ளது. பாலிவுட்டின் மார்கெட்டை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மீண்டும் உயர்த்திய பெருமையுடன் தற்போது உலகளவில் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் என்ற பெருமையையும் ஷாருக் கானின் பதான் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வரும் செப்டம்பர் மாதம் ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் சல்மான் கானின், கிஸி கா பாய் கிஸி கி ஜான் திரைப்படம் பிடித்துள்ளது, அதை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உள்ளது.

இந்த பட்டியலில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் கவனத்தை வாரிசு திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பத்தாவது இடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐஎம்டிபி வெளியிட்டுள்ள இந்த பட்டியலை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.