தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டில் நடந்து முடிந்த 2023ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளார். தொடர்ந்து பல சமூக நல செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் தளபதி விஜய் மாணவ மாணவிகளை கௌரவிக்க இருப்பது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. முன்னதாக தற்போது தனது திரைப்பயணத்தில் 67வது திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனது ரசிகர்கள் படையை கொண்டு வெறும் நற்பணி மன்றமாக இல்லாமல் அடுத்த கட்டமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான பல முக்கிய செயல்பாடுகளை தளபதி விஜய் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தளபதி விஜயின் ரசிகர்கள் தங்களது மக்கள் இயக்கத்தின் வாயிலாக உருவாக்கிய தளபதி விஜய் குருதியகம் செயலி மூலமாக ரத்த தானத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரத்த தானத்தின் அவசியத்தை முன்னிறுத்தி, பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை ரசிகர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த பயனுள்ள செயலிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய் ரசிகர்கள் தானாக முன்வந்து விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். சமீபத்தில் இச்செயலை பாராட்ட முடிவெடுத்த தளபதி விஜய் தனது ரசிகர்களையும் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நேரில் அழைத்து பாராட்டியதோடு, இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும், தொடர்ந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அதற்கான மேற்படி உதவிகள் தேவைப்பட்டால் அதை செய்யவும் தயாராக இருப்பதாக தளபதி விஜய் தெரிவித்திருந்தார். அதேபோல் அடுத்தடுத்து பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் அதற்கு இதே போல் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தனது நிர்வாகிகளையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்க இருக்கும் தளபதி விஜய் அவர்களின் உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக வரும் 20ம் தேதிக்குள் மாவட்ட வாரியாக மாணவ, மாணவிகளின் பட்டியலை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார். இதே போல் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க தளபதி விஜய் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் இந்த நலத்திட்டம் தற்போது பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.