கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு இந்திய சினிமாவில் உச்சபட்ச நடிகராய் கொடி கட்டி பறக்கும் நடிகர் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் உலகளவில் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார். தொடர்ந்து ரசிகர்களிடையே படத்திற்கு படம் எதிர்பார்பை உருவாக்கி வரும் தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்தே மக்கள் சேவையில் அதிகம் நாட்டம் கொண்டவராய் இருந்து வருகிறார்.

அதன்பாடு பல சமூக சேவைகளை தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தமிழகமெங்கும் செய்து வருகிறார். இந்த ஆண்டும் விஜய் அவரது பிறந்த நாளை முன்னிட்டு 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் அதிகம் பேசப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது விஜய் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும் கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘இரவு கல்வி பயிலகம்’ தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் சென்னை பெரம்பூர் தொகுதி முத்தமிழ் நகரில் வடசென்னை மாவட்ட இளைஞர் தலைமை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் முதற்கட்டமாக கன்னியாகுமரியில் 4, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா 3, சென்னை, சேலம், கோவை, திருச்சியில் தலா 1 என 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் இந்த பயிலகத்தில் தற்போது 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. படிப்படியாக வருங்காலங்களில் விரிவுபடுத்த இருக்கவுள்ளதாக மக்கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்

மேலும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகமெங்கும் கல்வி வளர்ச்சியை ஊக்கு விக்கும் வகையில் நோட்டு புத்தககள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இது குறித்து மக்கள் இயக்கம் பதிவிட்ட பதிவில்,

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு.! வடசென்னைக்கு வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 1400 மாணவ, மாணவிகளுக்கு நேற்று சுமார் 2 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம், பேனா, பென்சில், எழுது பொருட்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் கை பை ஆகியவை வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விஜய் குருதியகம், விஜய் விழியகம் தொடர்ந்து தற்போது விஜய் பயிலகமும் மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.