கடந்த 2020 ல் இயக்குனர் மிண்டி கலிங் இயக்கத்தில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான தொடர் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever). இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் தனது பள்ளி பருவ காலங்களில் சந்திக்கும் நிகழ்வுகள் அதனூடே வரும் சிக்கல்கள் குறித்து உருவான இந்த தொடர் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 4 சீசன்களாக இந்த தொடர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 8 ம் தேதி இந்த தொடரின் நான்காவது சீசன் நேற்பிளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து உற்சாகத்தில் அந்த தொடரின் ரசிகர்கள் நெவர் ஹேவ் ஐ எவர் தொடருக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

10 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரின் இறுதி எபிசோடில் கொண்டாட்டங்கள் நிறைந்த விழா காட்சியில் தளபதி விஜய் படத்தின் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த 2016 இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இடம் பெற்றுள்ள ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே' பாடல் நெவர் ஹேவ் ஐ எவர் இணைய தொடரில் இடம் பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிபடுத்தி வருகின்றனர். மேலும் விஜய் திரைப்படங்கள் உலகளவில் கவனிக்கபடுகிறது என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதே தொடரில் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘சாமி சாமி’ பாடலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து தளபதி விஜய் அவரது 68 படமான ‘தளபதி 68’ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.