அடுத்தடுத்து ரசிகர்கள் விரும்பும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜயின் நடிப்பில் அடுத்த பிளாக்பஸ்டராக வர தயாராகி இருக்கிறது வாரிசு திரைப்படம். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொங்கல் வெளியீடாக ஒரே தினத்தில் (ஜனவனி 11) அஜித் குமாரின் துணிவு படமும், தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தோடு வாரிசு திரைப்படத்தை எதிர்பார்ப்பதற்கு காரணம் வாரிசு ரிலீஸுக்கு பிறகு எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் வெளிவரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தது தான். சமீபத்தில் தளபதி67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்த அட்டகாசமான அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் திரு.லலித் குமார் அவர்கள் வெளியிடுகிறார்.

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்னும் ரிலீசுக்கு மூன்று நாட்களே இருப்பதை அறிவிக்கும் வகையில் படக்குழுவினர் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வாரிசு திரைப்படத்தின் அசத்தலான அந்த புதிய போஸ்டர் இதோ…